Skip to main content

ரகுவரனை கன்னத்தில் அறைந்த நடிகை... மறைமுகமாக உள்ளுக்குள் ரசித்த இயக்குநர்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரகுவரன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சில நடிகர்களின் செயல்களைப் பார்க்கும்போது அவர்கள் மீது தானாகவே மதிப்பும் மரியாதையும் நமக்குவரும். 'என் வழி தனி வழி' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரகுவரன் நடந்துகொண்ட விதம் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். அதன் பிறகு, நடிகர் ரகுவரன் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அந்தச் சமயத்தில், வில்லனாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் ரகுவரன், கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருந்தார். 

 

'என் வழி தனி வழி' படத்தில் நடிகர் ரகுவரனை நாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை பானுப்பிரியாவின் தங்கை சாந்தி பிரியா நடித்தார். 'பூக்களைப் பறிக்காதீர்கள்', 'பூமலை பொழியுது' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி. அழகப்பன் இந்தப் படத்தை இயக்கினார். ஏ.வி.எம்மின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாபு ஒளிப்பதிவு செய்ய, நான் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினேன்.  

 

நேர்மையான இளம் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் நடித்திருந்தார். நேர்மையான வக்கீலாக ரகுவரன் இருப்பதால், அவருக்குப் பெரிய அளவில் வழக்குகள் வராது. அதனால் மனமுடைந்த ரகுவரன் பகலிலேயே குடிக்க ஆரம்பிக்கிறார். வக்கீல் உடையான வெள்ளை சட்டை மற்றும் கறுப்பு அங்கியுடன் போதையில் ரோட்டில் விழுந்து கிடப்பார். ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வக்கீலாக நடிகர் ரகுவரன் மாறிவிடுவார். ரகுவரனுக்கு அக்காவாக கீதா நடித்தார். ரகுவரனின் இந்தச் செயல்களை அவர் அக்கா கண்டிப்பது மாதிரியான காட்சியை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கிக்கொண்டிருந்தனர். அது இரவு நேரக்காட்சி. அன்று படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.

 

ரகுவரனின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் அவரது அக்கா, ரகுவரனை ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும். இயக்குநர் காட்சியை விளக்கிக் கூறியவுடன் படப்பிடிப்பு தொடங்கியது. கீதா ரகுவரனை அடிக்க மெல்ல கையை ஓங்கினார். உடனே அவரைத் தடுத்த இயக்குநர் அழகப்பன், "என்னமா கீதா... அவன் பகலெல்லாம் குடிச்சிட்டு தொழிலை ஒழுங்கா பார்க்க மாட்டுக்கான். அவன் எதிர்காலத்தை நினச்சு நீ கவலைப்படுற... அப்படினா எவ்வளவு கோபத்தோடு அடிக்க வேண்டும்... நல்லா வேகமாக அடிம்மா" என்றார்.  உடனே அவர் வேகத்தைக் கூட்டி அறைகிறார். "இந்த வேகம் போதாது. இன்னும் ஓங்கி அடிம்மா" என இயக்குநர் கூறுகிறார். வேகம் போதாது என இயக்குநர் கூறக்கூற கீதாவும் வேகத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார். நான்கைந்து டேக்கிற்கு மேல் எடுத்துவிட்டனர். அதன் பிறகுதான், இயக்குநர் டேக் ஓகே செய்தார். அந்த டேக் முடிந்ததும் கீதா ஓர் ஓரத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிடுகிறார். இயக்குநர் அழகப்பனும் ஒளிப்பதிவாளர் பாபுவும் 'இது படம்தான' எனக் கூறி நடிகை கீதாவை தேற்றினார்கள். நீண்டநேரம் கழித்தே கீதா அழுகையை நிறுத்தினார். அன்று படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

 

நானும் ரகுவரனும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் மறுநாள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நடிகர் ரகுவரன் சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தைக் கூறினார். "நான் சிலமுறை கால்ஷீட் ஒழுங்காக கொடுக்காததை மனதில் வைத்துக்கொண்டு இந்த அழகப்பன் என்னை நேற்று பழிவாங்கினான் நீங்க கவனிச்சிங்களா.. அவனுக்கு என் மேல கோபம் இருக்கு... அதை நேரடியாக அவனால் காட்ட முடியலன்னு கீதாவை அறையச் சொல்லி டேக் எடுத்துகிட்டே இருக்கான்" என்றார். பின்னர், அந்தக் காட்சி முடிந்ததும் அழகப்பன் என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டார். கீதாவிற்கு ஆறுதல் கூறினார் என்று நான் கூறினேன். "உண்மையிலேயே நான்தான் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால், நான் கூறவில்லை ஏன் தெரியுமா... இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் எனக்கு அக்கா... நான் அவர் தம்பி... அந்த உரிமையில் அவர் அடித்தார்... அவ்வளவுதான்" என்றார். ஒரு நடிகர் நடிக்கும்போது கதாபாத்தித்தோடு வாழ வேண்டும் என்பார்கள். அதற்கு நடிகர் ரகுவரன் மிகப்பெரிய உதாரணம். இன்று நடிகர் ரகுவரன் நம்மோடு இல்லை. ஆனால், இந்தப் படம் முடியும்வரை "அவர் என்னோட அக்கா" என்று ரகுவரன் கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளன. இந்தச் சம்பவம் நடிகர் ரகுவரன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.          

 

 

சார்ந்த செய்திகள்