'சண்டக்கோழி - 2' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நாயகன் விஷால் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். விஷால் - வரலக்ஷ்மி நட்பு பரவலாகப் பேசப்படுவது. சண்டக்கோழி - 2 தான் இவர்கள் இணைந்து நடித்து வெளிவரும் முதல் படம். இதற்கு முன்பு இவர்கள் நடித்த 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவரவேயில்லை. தந்தை சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தல், அதனைத் தொடர்ந்து ஊழல் புகார் கொடுத்தது என பல சந்தர்ப்பங்களில் எதிர்த்து வந்துள்ள விஷால், மகள் வரலக்ஷ்மியுடன் நட்புடன் இருக்கிறார். இதை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தின் டீஸரில் வரலக்ஷ்மி வரும் இரண்டு வினாடி காட்சியை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், சண்டைக்கோழி 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லிங்குசாமியின் அனுமதியுடன் அதைப் பற்றி சில வார்த்தைகளை பேசினார் விஷால்.

"லிங்குசாமியின் அனுமதியோட சண்டைக்கோழி 2-ல் வரலக்ஷ்மி பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன். ஏன்னா, லால் சார், வரலக்ஷ்மி இரண்டு பேரின் பாத்திரம் குறித்து கொஞ்சமாத்தான் சொல்லணும்னு லிங்குசாமி சொல்லியிருக்கார். அதைத்தாண்டி ஒரே ஒரு விஷயம் சொல்றேன். நிச்சயமாக, நீங்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை, எங்களையெல்லாம் மறந்துடுவீங்க. ஆனால் வரலக்ஷ்மி கதாபாத்திரத்தை மறக்க மாட்டீர்கள், அவ்வளவு பலமான பாத்திரம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்" என்றார்.