தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் தக்ஷின் மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான தக்ஷின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் கார்த்தி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வெற்றிமாறன் பேசுகையில், "கலைக்கு மொழி இல்லை, எல்லை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் கலைக்கு நிச்சயமா மொழி இருக்கு, கலாச்சாரம் இருக்கு, எல்லை இருக்கு, ஆனால் கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும். இது லாக்டவுன் சமயத்தில் நடந்தது. எல்லா ஓடிடி தளத்திலும் எல்லா விதமான படங்களையும் பார்க்க ஆரம்பிச்சோம். லாக்டவுனுக்கு பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் மாற ஆரம்பிச்சிருக்கு. இப்போது பான் இந்தியா என்ற பாணியில் நிறைய மக்களை சென்றடையும் படங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் கடந்த 2 வருடங்களாக அப்படி வந்த படங்கள், அவங்க மண்ணுக்கு வெளியில் உள்ளவர்களை டார்கெட் பண்ணி படம் எடுக்கவில்லை. உதாரணத்துக்கு கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா உள்ளிட்ட படங்கள் நிறைய மக்களை சென்றடைவதற்காக ஒவ்வொரு மொழிகளிலிருந்தும் நடிகர்களை தேர்வு செய்யவில்லை.
பெரும்பாலான சமயத்தில் அப்படி செய்யும் போது நாம் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த படங்கள் அனைத்தும் அந்தந்த மக்களுக்காக எடுத்த படங்கள். அந்தந்த மண்ணுக்கு ஏற்றவாறு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம். இவை அனைத்தும் மற்ற மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாம் நம்முடைய கதையை சொல்கிறோம். ஆனால் அதனுள் இருக்கிற உணர்வு எல்லாருக்குமான உணர்வாகத்தான் இருக்கிறது. அதற்கு எல்லைகள் கிடையாது.
ஆஸ்கர் விருது வாங்குவதை விட மெயின்ஸ்ட்ரீம் படங்களை எடுத்து பாராட்டு வாங்குவது தான் சிறந்தது. இது தான் ஒரு நல்ல மாற்றத்திக்கான முன்னேற்பாடாக பார்க்கிறேன். தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நம்முடைய கதைகளை நம் மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் இன்றைக்கு இந்திய மார்க்கெட்டில் தென்னிந்திய மெயின்ஸ்ட்ரீம் படங்கள் ஒரு தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன. மற்ற மொழிகளின் திரைத்துறைகள் அதைப் பின்பற்றாததால் பின்னடைவை சந்திக்கின்றன. நாம் நம்முடைய அடையாளங்களோடு; நம்முடைய தனித்துவங்களோடு; நம்முடைய பெருமைகளோடு படங்கள் பண்றது தான் நம்முடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். இதே நிலை தொடரும் என நம்புகிறேன்" என்றார்.