அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த படம் கூழாங்கல். லேர்ன் அண்ட் டீச் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் விருதுகளும் வென்றுள்ளது. 94வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கரின் இறுதி சுற்றுவரை சென்று பின்பு வெளியேறியது.
2021 ஆம் ஆண்டே இந்தப் படம் அனுப்பப்பட்டிருந்தாலும் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் சுதா கொங்கரா, "எனக்கு மிகவும் பிடித்த படம். மிகவும் பிடித்த இயக்குநரும் கூட" என குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தை பார்த்து முன்னதாகவே பாராட்டு தெரிவித்திருந்த இயக்குநர் வசந்த பாலன், படம் குறித்து மற்றொரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "கூழாங்கல் திரைப்படம் சிறப்பான அனுபவம். ஆனால் வெறும் வாழ்த்துகளுடன் திரைக்கலைஞன் வாழ முடியாது. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இது கடுமையான தண்டனைக் காலம். மீள்கிறவர்கள் பாக்கியவான்கள். இப்படி சிறிய திரைப்படங்கள் சம்பந்தமான உண்மையைச் சொன்னால் வசந்தபாலன் எப்பொழுதும் கசப்பை முன் வைப்பார் என்று ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும். லவ்டுடே ஓடலையா, டாடா ஓடலையான்னு ஒரு கூட்டம் புள்ளி விவரத்தை முன் வைக்கும். இதுவும் கடந்து போகும்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.