முத்துக்குமார் இயக்கத்தில் எஸ்.குஷ்மாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபி நக்ஷத்ரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் கடந்த மாதம் வெளியான நிலையில், பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள், விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாக அமைந்திருந்தது. இத்தொடரை பார்த்த பலரும் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் முத்துக்குமாருக்கு பாராட்டு தெரிவித்து பெரியார் சிலை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயலி வெப் சீரிஸ், வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.