கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பலரும் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை ஒழிக்க 58 பசுக்களுடன் 'கோ' பூஜை நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் பி.டி. செல்வக்குமார். மேலும், 11 சுமங்கலிப் பெண்களும் பூஜையில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ள பி.டி. செல்வக்குமார், “கரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விஞ்ஞானமும், மருத்துவமும் நமக்குக் கைக்கொடுக்காத நேரத்தில் ஆன்மீகம் நம் மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலே இந்த மெகா 'கோ' பூஜையை நடத்தினோம். 'கோ' பூஜைக்கு அத்தனை அற்புதங்கள் உண்டு. மக்கள் அனைவரும் பயத்துடனும், பதட்டத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்வது பசியால் தமிழகத்தில் இனி யாரும் இறந்துவிடக்கூடாது என்பதுதான். வருங்காலத்தில் பொருளாதார பிரச்சனையால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. இப்போதே வறுமையைக் காரணம் காட்டி நிறைய திருட்டு, கொலை போன்றவை நடைபெறுகிறது. மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இனி காப்பாற்றுவதற்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம் தேவை. சிறு தொழில், குறு தொழில், விவசாயம் செய்பவர்கள் மூச்சுத் திணறும் அளவுக்கு வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.