
பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜான் க்ரீனின் நாவல் ‘ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’. இந்த நாவலை மையமாக வைத்து இதே பெயரில் 2014ஆம் ஆண்டு வெளியாகி பலரையும் அழ வைத்த ஒரு சிக் லவ் ஸ்டோரி. கிட்டதட்ட உலகம் முழுவதும் பலருக்கும் பரிச்சயமான இந்த நாவலை அல்லது படத்தை இந்தியாவில் 'தில் பேச்சாரா' என்ற தலைப்பில் ரீமேக் செய்கிறார்கள் என்றபோது முதலில் ரசிகர்களிடையே மிக்ஸ்ட் ஃபீலிங்ஸ்தான் இருந்தது. 'ரீமேக்' என்றாலே அனைவருக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. காரணம், தற்போதைய நிலவரத்தில் பல ரீமேக் படங்கள் கலவரமாகவே இருக்கின்றன. பின்னர், இதுகுறித்து அவ்வளவாக செய்திகள் எதுவும் வெளியாகாமல் மே மாதம் வெளியாகிறது என்பதை மட்டும் தெரிவித்து படக்குழு விறுவிறுப்பாக படத்தின் ஷூட்டிங்கை நடத்தியது. இருந்தாலும் கரோனா அச்சுறுத்தலால் இப்படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. அடுத்து சுசாந்தின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து சங்கடங்களாகவே நிகழ, இன்னொரு பக்கம், சுசாந்தின் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதுதான் சுசாந்திற்கு நாம் செய்யும் கடைசி மரியாதை என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். ஆனாலும், தயாரிப்பு நிறுவனம் ஹாட்ஸ்டாரில் அனைவரும் பார்க்கும் வண்ணம் இலவசமாக வெளியிட்டுள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு வெளியான இப்படத்தை பலரும் பார்த்து கண்கலங்கி பதிவுகளால் சமூக ஊடகங்களை நிரப்பி வருகின்றனர். யாருக்குதான் அது இருக்காது, கோடிக்கணக்கானோரால் ரசிக்கப்பட்ட நடிகர் சுசாந்தின் கடைசி படம் இதுதான் என்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. படத்திற்கு வருவோம்.
தில் பேச்சாரா... உதவியற்ற இதயம் என்பதுதான் இதன் பொருள். கண்டிப்பாக தற்போதைய குலோபலைசேஷன் காலகட்டத்தில், உலகமே கைக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னாலும், பலரின் இதயங்களுக்கும் யாராவது அன்பு செலுத்தி, உதவி புரிவார்களா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. தனிமையில் சிறகடிக்கலாம் என்று நினைத்தாலும், சிறகை அசைக்க ஒரு பலமாக அன்பு தேவைப்படுகிறது என்பது நிதர்சனம். இப்படி அன்புக்கான ஏக்கத்துடன் இருக்கும் தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் கிஸியின்(சஞ்சனா சங்கி) சிறகை அசைக்க வந்த அன்பான ஹீரோதான் மேனி, இவரும் போன் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பார். புகைமண்டலம் சூழ, நிலக்கரி சுரங்கம், ஸ்டீல் பிளாணட், எங்கு பார்த்தாலும் குவாட்ரஸ் என்றிருக்கும் ஜம்சத்பூர்தான் கதைகளம். மிகவும் அருமையான காதல்கதை என்றாலே பணி சூழ்ந்திருக்கும் ஏரியாக்களையே டார்கெட் செய்து எடுப்பவர்களுக்கு மத்தியில், ஜம்சத்பூரை தேர்ந்தெடுத்து மிகவும் அழகாக காட்சிப்படுத்தியதற்கே இயக்குனரையும், ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்.
வெவ்வேறு விதமான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள், இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் நோயை வைத்து சிம்பத்தி கிரியேட் செய்யாமல், வேறு ஒரு பாதையில் சென்று நம்மை நெகிழ வைக்கும் படம்தான் இது. ஏற்கனவே ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதை அப்படியே எடுத்துவிட்டால் இந்திய ரசிகர்களுக்கு சுத்தமாக ஒட்டாது என்பதில் மாற்று கருத்தே இல்லை. அதேபோல, அங்கிருக்கும் சில காட்சிகளை நம்மூரில் வைத்தால் கலாச்சார காவலர்கள் கொடி பிடித்துவிடுவார்கள். இதையெல்லாம் கருதி நம் ரசிகர்களுக்கு ஏற்றார்போல சரியாக மாற்றி அமைத்திருக்கிறார்கள் புதுமுக இயக்குனர் முகேஷ் சாப்ரா மற்றும் திரைக்கதை குழுவினர்.
பாலிவுட்டிலும் ரஜினி தலைவர்தான் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. படத்தில் வரும் சுசாந்த் தமிழ் பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர், தீவிரமான ரஜினி ரசிகர். படத்தின் பல இடங்களில் ரஜினி ரெஃபரன்ஸ். ஆனால், பாலிவுட்காரர்களுக்கு ரஜினி இருப்பது கோலிவுட், டோலிவுட் அல்ல என்று தெரியவில்லை போல. ரஜினியை டோலிவுட்காரர் என்று சொல்வதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அம்மா, அப்பா, தனக்கு மூச்சுவிட பயன்படும் சிலிண்டர் என்று ஒரு சிறிய உலகில் வாழும் ஹீரோயினின் வாழ்வில்; சிரிப்பு, ஆசை, கனவு, காதல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதுதான் என்பதை உணர்த்தும் மாயாஜால காதலன். இந்த ஒரு வரிதான் வலிகளும், பரவசங்களும் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது.

பல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இப்படம், பார்க்கும் அனைவரையும் கண்டிப்பாக கட்டிப்போட்டுவிடும் என்பதில் எந்தவித கேள்வியும் இல்லை. படம் தொடங்கியது முதல் முடியும்வரை நம்முடன் ஒரு புன்னகையும், சோகமும் கைகோர்த்துக்கொண்டே வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடைய பங்கிற்கு படத்தின் மேஜிக்கை குறையவிடாமல் தன்னுடைய பின்னணி இசையால் சிலிர்க்க வைக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் அருமை, திடீரென சைப் அலிகான் கொடுக்கும் கெஸ்ட் அப்யரன்ஸும் கூட... எல்லோரும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் அதுவரை விடலை பையனாக சுற்றியவர், கேன்சரின் தாக்கத்தால், வலியால் என்னால் மற்றவர்களைப்போல தனித்து செயல்பட முடியவில்லை என்று அழுகும் காட்சி... அதுவரை கிஸி சிறகடிக்க உதவியாய் இருந்த உடல் சிறகடிக்க, கிஸி உதவுவாள். மனதில் காதலின் சுவடு கொஞ்சமேனும் மிச்சமுள்ளவர்களும் கண் கலங்குவார்கள், இதை பார்த்து. அதுதான் படத்தின் வெற்றி, சுசாந்தின் வெற்றி. 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் எல்லாம் கண்டிப்பாக ரசிக்க, 80ஸ், 70ஸ் கிட்ஸுக்கு, அதுவும் தமிழ், தெலுங்கு மொழிக்காரர்களுக்கு 'இததான் 'கீதாஞ்சலி', தமிழில் ‘இதயத்தை திருடாதே'னு மணிரத்னம் எடுத்தார் என்று ஒரு கேள்வி வரலாம்.
முந்தைய படம்: மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11