இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை,ட் திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் பரிசு பெற்ற மாணவி ஒருவர் பேசுகையில், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம ஒரு விஷயத்தை செய்யும்போது அதுக்கான பாராட்டு நமக்கு கிடைக்கிறப்ப தான் அதோட வேலியு (Value) தெரியுது. வாழ்க்கையில இன்னும் நிறைய செய்யனும்னு ஒரு மோட்டிவேஷன் (Motivation) கிடைக்குது. நம்ம மாநிலத்துல டாஸ்மாக் ஓபன் பண்ணி குடிக்கிறவங்கள என்கரேஜ் (Encourage) பண்றவங்களுக்கு மத்தில படிக்கிறவங்கள என்கரேஜ் பண்ற ஒரே கழகம்.. அது நம்ம தமிழக வெற்றிக் கழகம் தான். இதுதான் நமக்கு தேவையான மாற்றம். நம்ம தலைமுறைக்கு, ட்ரக்ஸ் (Drugs) இல்லாத சமூகத்தையும், எஜுகேஷனுக்கு (Education) முக்கியம் தர சமூகத்தையும் நம்ம விஜய் அண்ணா கொண்டு வருவாருனு நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கு. கண்டிப்பா அந்த மாற்றத்தை கொண்டு வருவீங்கனு நம்புறோம்” என்று பேசினார்.