காமெடி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ள சூரி இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இளையராஜா இசையில் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சூரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில், "இப்போது எல்லா குழந்தைகளின் கைகளிலும் செல்ஃபோன் இருக்கிறது. செல்ஃபோன் தேவைப்படும் போது மட்டும் அம்மா, அப்பாவிடம் இருந்து வாங்கிக்கோங்க. எல்லா நேரங்களிலும் தயவு செய்து செல்ஃபோனை வாங்காதீங்க. அதில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் நிறைய இருக்கு. அதனால் நல்ல விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்க.
என்னுடைய நண்பரின் இரண்டரை வயசு குழந்தை அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதால் அந்த குழந்தையின் கண்ணில் இருந்து சீல் மாறி வந்திருச்சு. பின்பு ஆபரேஷன் பண்ணுனதில் கண்ணில் உள்ள நரம்பு கட்- ஆகிருச்சு. அந்த இரண்டரை வயசு குழந்தை என்ன பாவம் செஞ்சிச்சு.
குழந்தைகளின் அழுகையை நிறுத்த அப்போதைக்கு நாம் செல்ஃபோனை கொடுக்கிறோம். ஆனால் அதன் விளைவு அக்குழந்தையின் வாழ்க்கையையே பாதித்து விடுகிறது. அதனால் குழந்தைகள் கையில் செல்ஃபோனை கொடுக்காதீங்க. அதற்கு பெற்றோர் முதலில் அளவோடு பயன்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் பெரியவங்க தான் குழந்தைகளை விட அதிகமா செல்ஃபோனை பாக்குறாங்க. அதனால் அவுங்க அளவோடு பயன்படுத்த வேண்டும்" என அட்வைஸ் வழங்கினார்.