உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சைக்கோ'. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சிங்கம் புலியும் மற்ற படங்களில் நடித்ததை தாண்டி மாறுப்பட்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
இப்படம் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி படம் குறித்து நமக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது உதயநிதியுடன் தான் நடித்த அனுபவத்தை பகிருந்துகொண்டார். அதில், “உதயநிதி இதற்கு முன்பாக பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதிலெல்லாம் ஹியுமர், ஹீரோ பக்கத்திலேயே காமெடியன் இருப்பார், குத்துப் பாட்டு, இரண்டு ஃபாரின் சாங், படத்தின் முடிவில் ஒரு ஃபைட் வந்து முடிவது போல இருக்கும். இதனால் வித்தியாசமாக நான் என்ன பண்ண போகிறேன் என்று அவர் யோசித்துதான் இதில் நடித்திருக்கிறார். அதுவும் அவர் என்னிடம் சொன்னது இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.
இந்த படத்தில் கண் பார்வையற்றவராக நடிப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்பதால் இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் கை தடியை வைத்துக்கொண்டு எப்படி நடப்பார்கள். தெரிந்த கண் பார்வையற்ற நபர்களை ஷூட்டிற்கே வரச் சொல்லி எப்படியெல்லாம் நடப்பார்கள், புக்ஸ் எல்லாம் எப்படி அவர்கள் வாசிப்பார்கள், சத்தமெல்லாம் எப்படி கேட்பார்கள், இப்படி அனைத்தையும் கேட்டு கேட்டு செய்வார். இந்த மாதிரி அவர் அற்பணிப்பாக செய்யும்போது நான் தான் உள்ளே புகுந்து எதையாவது பேசி அவரை சிரிக்க வைத்துவிடுவேன். மேலும் இந்த படத்தில் மியூசிக் கிட்டாரிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அதற்காக கிட்டார் பயன்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார்.
எனக்கு தெரிந்தவரையில் உதயநிதி நடித்த படங்களிலேயே அதிகமாக மெனக்கெடல் எடுத்த படமாக இதுதான் இருக்கும், வேற இதுவரை இல்லை. கண் தெரியாதவராக இதில் நடிக்கும்போது சுவற்றில் மோதுவதுபோல இருக்கும் ஷாட்கள் நான்கு முறை கேட்டாலும் திரும்ப திரும்ப செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.