Skip to main content

“இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது”- சிம்பு உருக்கம்

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
சிம்பு

 


'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர் பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார். 

 

அவருடைய மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ்பிபி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க, காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள, உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர். 

 

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது. 

 

அதைப்போல... "காதல்  அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

 

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர். விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே. லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்