சமீப காலமாகத் தனது மக்கள் இயக்கத்தை தீவிரமாக செயல்பட வைத்த விஜய், அதை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது அரசியல் கட்சிக்கு வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ள விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் என்ன தத்துவத்தை முன்வைக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். விஜய்க்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் சேர்த்து சொல்றேன். தொடங்குவது எளிது. தொடர்வது ரொம்ப கடினம். தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் யாரும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல.
இன்றைய அரசியலில் சூழலில், ஒரு நடிகரின் கட்சிக்கு, அவரின் ரசிகர் மட்டும் வாக்களித்து வென்று நாட்டை ஆளுவது என்பது சரித்திர புரட்சியாகும். ஆனால் வெகுவான மக்களை இழுக்கனும். எம்.ஜி.ஆருக்கு அது இருந்தது. அதனால் அவருக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இறங்கி செல்ல வேண்டும். இது ஒரு நாள், இரண்டு நாளில் நடக்கிற காரியமல்ல. பத்து ஆண்டுகளில் பயணம் செய்தால் தான், நெருங்க முடியும். அதை விஜய் செய்வார் என நம்புகிறேன்” என்றார்.