தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, "எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பிற்கு வராதது போன்ற பிரச்சனைகள் உள்ளன. அது சம்பந்தமாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி இதை பேசித் தீர்ப்பதாகவும் கூறியுள்ளோம்" என்றார்.
மேலும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகியோர் மீது இந்த பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு ரெட் கார்ட் எடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் இரு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட 14 நடிகர், நடிகையர் மீது புகார் எழுந்ததாகவும் அதனால் அவர்கள் மீது ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.