தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்சரண், 'ஆர்.ஆர்.ஆர்' படம் மூலம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளார். இப்படம் கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருதைப் பெற்றது. மேலும், 95வது ஆஸ்கர் விருதுக்கு தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட நிலையில், 'நாட்டு நாட்டு’ சிறந்த பாடல் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போது, விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும் நடிகைகளும் கலைஞர்களும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்துகொண்டனர்.
அதில், நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களைப் பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில், இப்பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் இடம்பிடித்திருக்கிறார். முதல் பத்து இடங்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்சரண் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர்.
ராம்சரண், தான் அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கான தேர்வில் எப்போதும் முழுமையான கவனத்துடன் இருக்கிறார். நம்மூரில் கூறப்படும் 'ஆள் பாதி ஆடை பாதி' என்கிற சொல்லாடலை நிரூபிக்கும் வகையில், தான் அணியும் ஆடை எப்போதும் தனித்துவமாகவும் சிறப்பானதாகவும் பிரத்தியேகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நவீன பணியிலான ஆடைகளை அணிந்து பேஷன் ஐகானாகவும் இருந்து வருகிறார்.