சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பு டார்ஜலிங், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தில் வரும் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. 'கபாலி' படத்திற்கு முன்பு வரை பெரும்பாலான ரஜினி படங்களின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி பாடிவந்தார்.
'கபாலி' படத்தில் முக்கிய பாடலாக இருந்த 'நெருப்புடா'வை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருந்தார். அந்தப் படத்தின் முதல் பாடலான 'உலகம் ஒருவனுக்கா' பாடலை அனந்து உள்ளிட்ட சிலர் பாடியிருந்தனர். 'காலா'வில் ஓப்பனிங் பாடலாக அமைந்த 'செம வெயிட்டு' பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத பலர் சேர்ந்து பாடியிருந்தனர். இந்த இரண்டு படங்களிலுமே பா.ரஞ்சித் தனது வழக்கமான அணியை வைத்து ரஜினி படங்களின் பாணியில் இல்லாத தனது பாணியில் ஓப்பனிங் பாடல்கள் வைத்திருந்தார். இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மீண்டும் எஸ்.பி.பி பாடுகிறார் என்ற செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய வந்தேன்டா பால்க்காரன், நான் ஆட்டோக்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, அதான்டா இதான்டா, என் பேரு படையப்பா, தேவுடா தேவுடா, காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் உள்பட அனைத்து பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றவை என்பதும் இடையில் 'பாபா' படத்தில் மட்டுமே சங்கர் மஹாதேவன் 'டிப்பு டிப்பு டிப்பு' பாடலை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.