Skip to main content

“ஓட்டுக்காக லஞ்சம் கொடுத்து வாங்கிட்டாங்க”- ராதாரவி வேதனை!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்ற பெயரில் ஒரு புது அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா போட்டியிடுகிறார்.
 

radharavi

 

 

பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும், இரண்டு செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே சதீ‌‌ஷ்குமார் ஆகியோரும், இரண்டு துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரே‌‌ஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியிடும் ராதாரவி பேசுகையில், “என்னை மதித்து என்னுடைய வீட்டிற்கு நேராக வந்து பார்த்தவர்கள் இங்கிருக்கும் அணியை சேர்ந்தவர்கள்தான். என்னுடைய ஆதரவு இவர்களுக்கு எப்போதும் உண்டு. இப்போதே தேர்தலுக்காக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது நான் நினைக்காதது. இப்போதே சில மாறுதல்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் அதற்கு முன்பாக வாக்கு கேட்டுக்கொண்டிருப்போம். 

நான் ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடையாது. நான் ஒரு நடிகர், டப்பிங் யூனியன் தலைவர், ஃபெப்ஸியில் இருப்பவம். ஏனென்றால் நான் எப்போதும் தயாரிப்பாளருடன் சண்டை போடும் ஆள். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், இன்னும் அவர்களுக்கு தேவையானவற்றை கொடுக்க வேண்டும் என்று பேசுபவன். இது ஃபிக்ஸ்ஸாகிவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம், உங்களில் யாராவது முன்வந்தால் என் இடத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னைவிட சீனியர் மோஸ்ட் ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நம்முடைய அணிக்குள் கசப்புகள் இல்லாமல் இருக்கும். 

இதேபோலதான் போனமுறை மூன்றாவது அணி உருவானது. ஒரு மகான் உள்ளே வந்தார் மொத்தமும் நாசமாகிவிட்டது. தயரிப்பாளர் சங்கம் புல்லு முளைக்கும் இடமாகிவிட்டது. ஏற்கனவே நடிகர் சங்கத்தில் முளைத்துவிட்டது. தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழன் தான் வரவேண்டும் என்றால் டி.சிவா அதற்கு சரியானவர். எனக்கும் அவருக்கும் நிறையவே சண்டை வந்திருக்கிறது. வாக்கு செலுத்தும்போது இது தேறுமா? தேறாதா?  என்று யோசித்துவிட்டு ஓட்டு போடுங்கள். முரளி சங்கத்திலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்ய மாட்டார். 

இனி நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். என்னுடைய நாடக சங்க நடிகர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கிவிட்டனர். அதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்