கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்குத் தமிழகம் முழுவதும் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் உதவி வருகிறார். இன்று 50 ஆவது நாளை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் 140 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இவர்களுடன் நடிகர் இமான் அண்ணாச்சியும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் இதுகுறித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி.செல்வகுமார் பேசியபோது...
''கிட்டதட்ட அறுபது நாட்கள் கடந்து விட்டது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எல்லோருமே விலகி இரு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இனியாவது இணைந்து உதவி செய்திடு என்று சொல்வோம். நிறைய பேர் தொழில் செய்ய முடியாமல் பல நெருக்கடிகளைச் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். புகைப்படக் கலைஞர்கள் இன்று நம்முடைய வாழ்வில் மிக முக்கியமானவர்கள். நம்முடைய பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களிலும் நம்முடைய புகைப்படம் இருப்பதற்கு காரணம் அவர்கள் தான். திருமணம், திருவிழா போன்ற நல்ல நிகழ்வுகளுக்குத் துணை நின்றவர்கள். இன்று அவர்களுடைய வாழ்வாதாரம் இழந்து பொலிவிழந்து நிற்கிறார்கள். எந்த ஒரு கலைஞனும் தனக்கு உதவி வேண்டும் என்று கேட்கமாட்டான். நம்மை அழகாக காட்டும் கலைஞர்களுக்கு அரசு கண்டிப்பாக உதவ வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்'' எனக் கூறியுள்ளார்.