தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியல் வெளியான நிலையில் அதில் இப்படம் இடம்பெற்றது. இதுகுறித்து பார்த்திபன், "ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் மட்டுமே ‘இரவின் நிழல்’ இருக்கிறது. ஆனால் 'ஆர்.ஆர்.ஆர்' ஆஸ்கர் நாமினேஷன் செய்யப்படவுள்ள லிஸ்டிலேயே இருக்கிறது. வெற்றிவாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப்பெரிய செலவில் செய்யப்பட்டது உலகறிந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடிங்க பாக்கலாம்" எனக் குறிப்பிட்டு ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களது தலைப்பை கமெண்ட் செய்திருந்தனர்.
இதையடுத்து மற்றொரு பதிவில், "என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்! 'புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்' எனக் கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க.. இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க!" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி, "தலைப்பை விடுங்க.. எதுக்கு 53 பக்கம் மயிலிறகு?" எனக் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், அவரது தலைப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.