இந்தியாவின் முதல் பழங்குடியின விடுதலைப் போர் வீரரான பிர்ஷா முண்டாவின் வாழ்க்கையை இந்தியில் படமாக்கப்போவதாக இயக்குனர் பா.ரஞ்சித் தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தது. இதற்கான வேலையை ஏற்கனவே அவர் தொடங்கிவிட்டார். 'காலா' படம் வெளியானபின் தனது அடுத்த படம் இந்தியில் இருக்குமென்று ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்பொழுதுதான் அந்தப் படம் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது.
இதற்கிடையில் கடந்த மாதம் ஒரு ஆங்கில நாளிதழுக்கு இயக்குனர் கோபி நயினார் அளித்த பேட்டியில், தான் பழங்குடியின விடுதலை வீரர் பிர்ஷா முண்டாவின் வாழ்க்கையை படமாக்கப்பபோவதாகத் தெரிவித்திருந்தார். நேற்று பா.ரஞ்சித்தும் அதே வீரரின் வாழ்க்கையை படமாக்குவதாக தகவல் வந்ததிலிருந்து குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம் தன்னுடைய கதை என்றும் 'கறுப்பர் நகரம்' என்ற பெயரில் பாதிப் படப்பிடிப்பு முடிந்தது என்றும் அதில் இருந்த காட்சிகள் அப்படியே 'மெட்ராஸ்' படத்தில் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். 'கத்தி' படக் கதை குறித்தும் இதே குற்றச்சாட்டை எழுப்பிய கோபி நயினார் பின்னர் 'அறம்' படத்தின் மூலம் தன்னை நிரூபித்தார்.
'மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித், கோபி நயினார் இடையே இருந்த சலசலப்பு 'அறம்' வெளியான பிறகு சரியானது. இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். தற்போது, மீண்டும் இந்த இரு இயக்குனர்களும் ஒரே வீரரின் கதையை படமாக்குவதாகக் கூறியுள்ளனர். இது குறித்துப் பேசிய கோபி நயினார், "பிர்ஷா முண்டா'வின் வாழ்க்கைக் கதை பல படங்கள் உருவாக்குமளவுக்குப் பெரியது, ஆழமானது. எனவே, ரஞ்சித்தும் இதை இயக்குவது எனக்கு மகிழ்ச்சியே தவிர வருத்தமில்லை" என்று கூறினார்.