நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யபடுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தேமுதிகவின் தலைவரும், கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும், நமது அன்பு அண்ணன் விஜய்காந்த் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தோம். அன்பு சகோதரி குஷ்புவும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவாவும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஜயகாந்தின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள். இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்.
அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம், அவருடன், நண்பர் சரத்குமாரும், நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து, வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது. கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது, அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது, இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது. வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.