நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சிவாஜியை பற்றி அதிகம் பேசுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் இளையராஜாவை பற்றியே அதிகம் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார். இதனால் அரங்கின் கீழே அமர்ந்திருந்த சிவாஜியின் ரசிகர்கள் சிவாஜி பற்றி பேசச் சொல்லி கூச்சலிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
அவர்களுக்குப் பதிலளித்த முத்துலிங்கம், "இருக்கட்டும் சிவாஜியைப் பற்றித்தான் எல்லாரும் பேச வந்திருக்காங்கல்ல" என சொல்ல, தொடர்ந்து ரசிகர்கள் சத்தம் போட "போய்யா" என கூற, கோபமாகத் தன் இருக்கையில் போய் அமர்ந்தார் முத்துலிங்கம். உடனே பிரபு எழுந்து ரசிகர்களை சமாதானப்படுத்தினார். இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
கவிஞர் முத்துலிங்கம், மொத்தம் 1664 பாடல்கள் எழுதியிருக்கிறார். 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். சிவாஜி நடித்த 'ஊருக்கு ஒரு பிள்ளை', 'வெள்ளை ரோஜா' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.