மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில் விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாகவும் பின்பு என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். பின்பு த்ரிஷா மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. மன்சூர் அலிகானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதன்பிறகு த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை. என்னுடைய பி.ஆர்.ஓ வை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, 'அடக்க நினைத்தால் அடங்க மறு; திரை கதாநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு' என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் மன்னித்துவிடு எனப் புரிந்துகொண்டு வெளியிட்டுவிட்டார்” என்று சொன்னார்.
இந்த நிலையில், த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர். எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு த்ரிஷா விரைவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது.