துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய பின்னர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசுரன் என்றொரு படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் ரிலீஸாவதில் பல சிக்கல்கள் இருப்பதால் தற்போதுவரை ரிலீஸாகாமல் உள்ளது. இதனையடுத்து அருண்விஜய் மற்றும் பிரசன்னாவை வைத்து மாஃபியா என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஃபிப்ரவரி 21ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இதனிடையே நமக்கு மாஃபியா படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவரிடம் நரகாசுரன், மாஃபியா படங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் தனுஷின் 43வது படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், “தனுஷ் 43 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ப்ரிஸ்க்காக போய்க்கொண்டிருக்கிறது. நானும் ஜிவி பிரகாஷ் அண்ணாவும் இணைந்து பணிபுரிய தொடங்கிவிட்டோம். தனுஷ் சார் நிறைய படங்களில் நடிப்பதால் பிஸியாக இருக்கிறார். அந்த பணியெல்லாம் முடிந்துவிட்டால் சரியான நேரத்தில் தொடங்கிவிடுவோம்.
தனுஷ் போன்ற பெரிய ஹீரோவுக்கு படம் பண்ணப்போகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். அருண் சாருக்கு இருக்கும் ஆடியன்ஸிற்காக எப்படி கதை சொன்னேனோ, அதேபோலதான் தனுஷ் சாருக்கென்று இருக்கும் பெரிய ஆடியன்ஸிற்கு ஏற்றார்போல கதையை சொன்னேன்.
நான் கதையை சொல்லி முடித்துவுடன் தனுஷ் எதையுமே சொல்லவில்லை, இதை மாற்றுங்கள் அதை மாற்றுங்கள் என்று எதுவுமே என்னிடம் சொல்லவில்லை. அதுபோன்றவர் கிடைப்பது கடினம் என நான் நினைக்கின்றேன். ஒரு இயக்குனராக அவரிடம் சென்றோம் என்றால் தனக்கு தேவையானதைதான் சொல்வார்கள் என்பதில் அவர் தெள்ளத்தெளிவாக இருக்கிறார். அவரிடம் சீக்கிரமாக இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன்” என்றார்.