இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இன்று, அரசு விழாக்களில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். அப்போது அவரது தலைமையில் சிலர் பாஜகவில் இணைகின்றனர் என்று செய்திகள் வெளியாகின. அதில் நடிகை கஸ்தூரியும் அமித்ஷா தலைமையில் பாஜகவில் இணய போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி. அதில், “அமித் ஷா முன்னிலையில் இன்று நான் பாஜகவில் இணையப் போகிறேன் என்று எனது மொபைல் போன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வதந்தி உண்மையை விட எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் இது.
நான் நேற்றுமாலை முருகனை சந்தித்தது உண்மைதான். ஆனால் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அல்ல. எனது குலதெய்வமான கடவுள் முருகன். நான் வேல்யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. முருகனின் சூரசம்ஹார நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டேன்.
அப்போ கட்சியில சேர்கிறேன் என்ற செய்தி? இந்த பொய் எங்கு உருவாக்கப்பட்டது என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று தெரிவித்துள்ளார்.