நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரும், சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் புரேமோசன் பணிகளில் பிசியாகியுள்ளார். இந்நிலையில் படத்தின் புரோமோசனுக்காக நேற்று பத்திரிகையாளர் சந்தித்து கமல் பேசியபோது.... "விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்-2’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது, அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. அதன் அடிநாதம்தான் இந்த படம்.
சினிமா என் தொழில். அதில், நான் வசதியாக இருக்கிறேன். இவரிடம் பணம் இருக்கிறது. ஊழல் பண்ண மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எஞ்சிய வாழ்க்கையில்தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய். என் தொழில், சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். எப்போது என் அரசியல் பணிகளுக்கு சினிமா இடைஞ்சலாக இருகிறதோ அப்போது படத்தில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சபாஷ் நாயுடு படம் 40 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்தகட்ட வேலைகள் தொடங்க வேண்டும். முதலில் ஷங்கர் 'இந்தியன் 2' வேலைகளை எப்போது தொடங்குவார் என பார்ப்போம். அதன்பிறகு 'சபாஷ் நாயுடுவை' எப்போது தொடங்கலாம் என பின்னர் திட்டமிடவுள்ளேன்" என்றார்.