Skip to main content

“இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை” - காளி வெங்கட்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
kali venkat speech at vike taxi movie event

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் கே.எம். இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் படம் 'பைக் டாக்சி'. இப்படத்தில் வையாபுரி, காளி வெங்கட் முதலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைக்கிறார் 

இப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். அப்போது காளி வெங்கட் பேசியதாவது, “இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை. ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி” என்றார். 

வையாபுரி பேசியதாவது, “எங்களை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரம் செய்கிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவை விட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது. லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார். இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். நாயகிக்கு  மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக் கேட்டேன், உங்களுக்கு மகளாக இவர் தான் சரியாக வருவார். அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுத்தேன் எனக் காட்டினார், அதைப் பார்த்தேன். அற்புதமாக நடித்துள்ளார் வாழ்த்துகள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

சார்ந்த செய்திகள்