'காலா' திரைப்படத்தில் மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் பாதுகாவலராக, தலைவராக இருக்கும் ஒருவராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். படத்தில் அவரது பெயர், கரிகாலன் (எ) காலா. காலா சேட் என மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே, மும்பையில் வாழ்ந்த திரவிய நாடாரின் மகள் விஜயலக்ஷ்மி, "இது என் தந்தையின் கதை. எங்கள் அனுமதியில்லாமல் எடுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
தற்போது படம் வெளியாகியிருக்கும் நிலையில், திரவிய நாடாரின் மகன் ஜவஹர் நாடார் என்பவர், " 'காலா' படத்தில் இடம் பெற்றிருக்கும் பல விஷயங்கள் எங்கள் தந்தையின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆனால், அவரது பெயரை எங்கும் குறிப்பிடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டனர்" என்று ரஞ்சித் மீதும் வுண்டர்பார் நிறுவனம் மீதும் குற்றம் சாட்டி, சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன் தந்தை வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள 'காலா' விஷயங்கள்:
'காலா சேட்' என்ற பெயரே தன் தந்தை திரவிய நாடாரின் நிறத்தை வைத்து மும்பைக்காரர்கள் அவரை அன்பாக அழைத்த பெயர் என்கிறார். அவர் வெல்லம் விற்கும் தொழில் செய்ததால் 'கூடுவாலா சேட்' என்றும் அழைக்கப்பட்டாராம்.
'காலா' படத்தில் காட்டப்படும் காமராஜர் நினைவு பள்ளி, தனது தந்தையால் 60களில் கட்டப்பட்ட பள்ளி என்றும் அந்தப் பள்ளியை படத்தில் வைத்தவர்கள் அவரது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாதது தவறு என்கிறார்.
படத்தில் ரஜினிகாந்த் அணியும் உடை பாணியும் தனது தந்தையைப் போன்று இருக்கிறது, ஒரே ஒரு வித்தியாசம் அவர் எப்பொழுதும் வெள்ளை நிறம் அணிவாராம்.
'காலா' படத்தில் இடைவேளையை ஒட்டி வரும் குடை சண்டைக் காட்சி அதிகம் பேசப்படுகிறது. திரவிய நாடாரும் எப்பொழுதும் குடையுடன்தான் இருப்பாராம். வெயிலென்றாலும் மழையென்றாலும் அவர் கையில் குடை இருக்குமாம்.
காலாவிடம் தாராவியே அடங்கி இருந்தாலும், அவர் தன் மனைவியிடம் அடங்கிப் போவது போல படத்தில் உள்ளது. ஈஸ்வரி ராவ் நடித்த அந்தப் பாத்திரம், முற்றிலும் தன் அம்மாவை நினைவு படுத்துவதாகக் கூறுகிறார் ஜவஹர். தனது தந்தையும் தாய்க்கு மிகுந்த மரியாதை கொடுத்ததாகவும் தனது தாய் அவரிடம் 'குழந்தைகள் வளர்கின்றன. பொது வேலைகள், சண்டைகளையெல்லாம் குறைத்துக்கொள்ளுங்கள்' என்று அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறுகிறார் அவர்.
"என் தந்தை மறைந்த பொழுது தாராவியின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தாராவி மக்கள் அனைவரும் வந்து குவிந்து மரியாதை செலுத்தினர். என்னிடம் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என் தந்தை உதவியதை பகிர்ந்து கொண்டனர். அவர்களது பிரச்சனையை என் தந்தை தீர்த்து வைத்ததைக் கூறி அழுதனர். இப்படி, அவரது வாழ்க்கையிலிருந்து இத்தனை விஷயங்களை எடுத்து படமாக்கிவிட்டு அவரது பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் இருப்பது மோசமான செயல். எங்களுக்கு பணம் தேவையில்லை. ஆனால், ரஞ்சித் தாராவியில் வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து, ஆராய்ந்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார், அவருக்கு என் தந்தை பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை" என்கிறார்.
மும்பையைக் கலக்கிய 3 தமிழ் டான்கள்!