Skip to main content

"நாம் பேசிய உண்மைகள் அவர்களது மனசாட்சியை அசைத்துப் பார்க்கிறது" - ஜெய் பீம் இயக்குநர் பேச்சு

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

TJ Gnanavel

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சென்னை மாவட்ட குழு சார்பில் ஜெய்பீம் கலைஞர்கள் மற்றும் களப்போராளிகளைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

 

விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் த.செ.ஞானவேல் பேசுகையில், "இந்தப் படத்தின் கரு உருவாகுவதற்கு காரணமாக இருந்த மிக முக்கியமான புள்ளியைச் சார்ந்த இயக்கத்தின் சார்பாக எங்களுக்கு பாராட்டு விழா என்பதால் இந்த மேடை எங்களுக்கு மிகவும் முக்கியமான மேடை. மிக்க நன்றியோடு இந்த மேடையில் நாங்கள் நிற்கிறோம். கலை கலைக்கானது மட்டுமல்ல; மக்களுக்கானதும் என்பதை என் மனதில் ஏற்றிக்கொள்ள நிறைய இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்துகள் எனக்கு துணை செய்துள்ளன. கம்யூனிச இயக்கங்களின் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று நினைத்தெல்லாம் ஜெய் பீம் படத்தின் கதையை நான் எழுதவில்லை. அது என் நோக்கமும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பற்றி நான் எழுதும்போது அங்கே இடதுசாரி இயக்கங்கள் வந்து நிற்கின்றன என்பதுதான் அவர்களுக்கு உள்ள சிறப்பே. ஒரு பார்வதி குறித்தோ, ஒரு ராஜாக்கண்ணு குறித்தோ நான் பேசவில்லை. தமிழகம் முழுவதும் 60 இருளர் கிராமங்களுக்கு சென்றேன். அங்கே ஏகப்பட்ட பார்வதிகளும் ராஜாக்கண்ணுகளும் இருக்கிறார்கள். 

 

ஜெய் பீம் என்ற முழக்கம் மானுட சுதந்திரத்தின் அடிமை முறைக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமாக தென்பட்டது. அதனால்தான் இந்தப் படத்திற்கு அந்தப் பெயரை வைத்தேன். கருப்பு, சிவப்பு, நீலம் என மூன்று நிறங்கள் செயல்பட்டால் மட்டுமே இந்தியாவை மீட்க முடியும்; இந்தியாவை ஜனநாயக நாடாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு வலுவான நம்பிக்கை உண்டு. இந்தப் படத்தில் உண்மையை பேசவில்லை என ஒரு விமர்சனம் இருக்கிறது. இங்கு பிரச்சனையே உண்மையை பேசியதுதான். நாம் பேசிய உண்மைகள் அவர்களது மனசாட்சியை அசைத்துப் பார்க்கிறது. உண்மை என்பது விதைபோல. அதை நீங்கள் மண் போட்டு மூட முடியாது. அது என்றைக்காக இருந்தாலும் முளைத்து வெளியே வரும்" எனப் பேசினார்.    

 

 

சார்ந்த செய்திகள்