Skip to main content

ரூ. 200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Jacqueline Fernandez granted bail rs 200 money fraud case

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

 


இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவந்தது. சமீபத்தில் கூட டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்ததோடு, அவர்   வெளிநாடு தப்பித்து செல்வதை தடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆஜராகிய  தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். 

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று விசாரணைக்காக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நேரில் ஆஜரானார். அப்போது பண மோசடி  வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கும்படி ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, பினைத்தொகை ரூ. 50 ஆயிரத்தை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்