Skip to main content

ஊரடங்கின் போது செல்போனில் படம் பிடிக்கப்பட்ட நடிகர் ஃபஹத் ஃபாஸில் படம்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
gewgtew

 

 

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்  'சியூ ஸூன்'. வருகிற செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், 'சியூ ஸூன்' வெளியாகவுள்ளது. அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் 'சூஃபியும் சுஜாதையும்' திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறகு, 'சியூ ஸூன்' மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. மஹேஷ் நாராயண் இயக்கி, படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படம் ஒரு பரபரப்பான கதையம்சம் உள்ள படம். இதில் நடிகர் ஃபஹத் ஃபாஸில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

கேரளாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரை, அவரது குடும்பம், துபாயிலிருக்கும் அவரது உறவினரின் மனைவியைத் தேடும் வேலையைக் கொடுக்கிறது. அந்த மனைவியோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு காணொளிக் குறிப்பை பகிர்ந்துவிட்டு மாயமாகி விடும் கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. ஊரடங்கின்போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்த படத்துக்கு உள்ளது. செப்டம்பர் 1 முதல், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், இந்தியா மற்றும் 200 தேசங்களில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள் இந்த படத்தை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். 

 

"பல்வேறு மொழிகளில், தனித்துவமான வகையில் புத்தம் புதிய பொழுதுபோக்கை வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சூஃபியும் சுஜாதையும், ட்ரான்ஸ், லூஸிஃபர் மற்றும் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டோடு நாங்கள் பெரும் வெற்றியை ருசித்திருக்கிறோம். ஃபஹத் ஃபாசில் என்றாலே சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பவர். ஒரு பரீட்சார்த்த முயற்சியாக அவர் இயக்குநர் மஹேஷ் நாராயணுடன் இணைந்து எடுத்திருக்கும் திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இன்னும் சில நாட்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், 'சியூ ஸூன்' வெளியீட்டோடு சேர்த்து இந்த பண்டிகை காலத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிமையைச் சேர்ப்போம் என நம்புகிறோம்" என்கிறார் அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா பிரிவின், இயக்குநர் மற்றும் தலைவர் (content) விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

 

"மஹேஷுடன் பணியாற்றுவது எப்போதுமே ஊக்கம் தரும் அனுபவம். 'டேக் ஆஃப்' திரைப்படத்தில் பணியாற்றும்போது அற்புதமான காலமாக இருந்தது. 'சியூ ஸூன்' திரைப்படத்தின் உருவாக்கம் மிக சுவாரசியமானதாக, உற்சாகமானதாக இருந்தது. முழு திரைப்படத்தையும் ஊரடங்கு நேரத்தில் படம் பிடித்துள்ளோம். இதுபோன்ற காலகட்டத்தில் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும், பொழுதுபோக்கும் நல்ல படைப்பை தர முடிவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து, ரசித்து, இந்த படத்தின் மீதான அவர்கள் அன்பை பகிர்வார்கள் என்று நம்புகிறேன்" என்கிறார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஃபஹத் ஃபாசில்.

 

"சியூ ஸூன் கணினித் திரையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படம். இந்திய சினிமாவில் கையாளப்படாத ஒரு புதிய கரு இது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடி காலகட்டத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொழில்நுட்பம் மூலமாக இணைப்பில் இருக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த கருவை இன்னும் ஒரு படி முன்னே கொண்டு போய், பல்வேறு கருவிகளின் திரைகள் வழியாக கதை சொல்லும் தனித்துவ முயற்சியை நாங்கள்  செய்திருக்கிறோம். மெய்நிகர் தொடர்பு மென்பொருள்கள் இன்றி அதை உருவாக்கியவர்கள் இல்லாமல், இது போன்ற ஒரு திரைப்படம் சாத்தியப்பட்டிருக்காது. இந்த காலகட்டத்தில் பல கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை உணர இந்த திரைப்படம் ஊக்கம் தரும் என்றும், இந்த சவாலான சூழலை வாய்ப்பாக மாற்றி, புது வகையான கதை சொல்லும் வடிவத்தை இனம் கண்டுகொள்வார்கள் என்றும் நம்புகிறேன். 'சியூ ஸூன்' திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ மூலமாக சர்வதேச அளவில் வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி" என்கிறார் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயண்.

 

 

சார்ந்த செய்திகள்