தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். நீலம் பண்பாட்டு மையம் என்ற இயக்கத்தினை ஆரம்பித்து அதன் மூலமாக சென்னையில் மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியை வருடாவருடம் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற இயக்குநர் பா.ரஞ்சித் புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனை குறித்து தனது கண்டனக் குரலை ட்விட்டர் வழியாகப் பதிவு செய்திருக்கிறார். ஆதி திராவிட நலத்துறை அமைச்சரையும், தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் நோக்கி அந்த கண்டனப் பதிவு உள்ளது.
அந்தப் பதிவானது “தொடரும் சமூக அநீதி... புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனங்கள். வன்கொடுமைகளை எதிர்கொண்ட மக்களை சந்திக்கத் துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.