Skip to main content

'பண்டாரத்தி புராணம்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

mari selvaraj

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்களும், படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'பண்டாரத்தி புராணம்' என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி புல்லட் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு உரிய விளக்கமளிக்கக் கோரி இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் இனி ‘மஞ்சனத்தி புராணம்’ என அழைக்கப்படவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்