சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்ட் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமீர், “வருமான வரிச்சோதனை என்பது பொதுவானது அதனால் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனையை நாம் விமர்சிக்க முடியாது. ஆனால், ஷூட்டிங்கில் இருப்பவரை அதிகாரிகளைவிட்டு அழைத்துவந்து ரெய்ட் செய்தது என்பது அவரின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. இதற்கு முன்பு வரை தமிழ்நாட்டில் வருமான வரிச்சோதனை என்பது ஆளும் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் வீட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாகதான் நடைபெற்றுள்ளது.
இதை மீறி பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று போராட்டம் நடத்தியது எல்லாம் கண்டிக்கத்தக்கது. விஜய் நினைத்திருந்தால் அவருடைய ரசிகர்களை பாதுகாப்பிற்கு அங்கு அழைத்திருக்க முடியும். ஆனால், விஜய் அப்படி செய்யாதது அவரின் மெச்சூரிட்டியை உணர்த்துகிறது. அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்பு டிவி விவாதம் நிகழ்ச்சியில் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டபோது விஜய்யை ஃபிராட் என்று சொல்கிறார். அதை எப்படி அந்த நெறியாளர் அனுமதித்தார் என்பது தெரியவில்லை. அவர் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த அர்ஜூன் சம்பத்திற்கு என்ன தொழில் முதலில் அதை சொல்ல சொல்லுங்கள்.
விஜய் தான் நடிக்கும் படங்களிலும், கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசுவதுதான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஏன் ஒரு நடிகர் அரசியல் பேசக் கூடாதா? சென்சார் போர்ட் அனுமதித்த பின்னர்தான் ஒரு படத்தில் வசனம் வைக்கப்படுகிறது என்னும்போது இவர்கள் யார் அது இருக்க கூடாது என்று சொல்வதற்கு. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம் அதனால்தான் இந்த ரெய்டின் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டிருப்பார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விஜய்க்குதான் சாதகமாக அமைந்து அவர் வளர்ச்சிதான் அடைவார், அவருக்கு பின்னடைவாக இருக்காது. விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால் தமிழனாக வரவேற்பேன்” என்றும் தெரிவித்தார்.