நடிகை அமலாபாலை ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட வழக்கில் பவீந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விஜய்யும் - அமலாபாலும் பிரிந்தனர். அதன் பிறகு ஆண் நண்பர் பவீந்தர் சிங்கை அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆண் நண்பர் பவீந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி அமலா பாலின் மேலாளர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் விழுப்புரம் போலீசார் பவீந்தர் சிங்கை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் பவீந்தர் சிங்குடன் சேர்த்து மேலும் 11 பேரின் பெயர்களும் இருப்பதால் போலீசார் அவர்களையும் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பவீந்தர் சிங் ஜாமீன் கோரி வானூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை வானூர் நீதிமன்றம் பவீந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் பவீந்தர் சிங் அமலாபாலுக்கும் தனக்கும் நடந்த பதிவு திருமணத்திற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.