இந்தியத் திரைத்துறையில் ரஜினி எனும் புயல் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக கரையைக் கடக்காமல் இன்று வரை சூறாவளியாய் சுற்றி வருகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் இளங்காற்றாக சினிமாவில் நுழைந்த ரஜினி எனும் புயல், அதன் சீற்றத்தை அதிகப்படுத்தி செகண்ட் ஹீரோவாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இன்னும் வேகமாக ஸ்டைலாக சுழன்று ஹீரோவாக உருமாறி, தமிழ் சினிமாவில் அசுர வேகத்தைக் காட்டி அசைக்க முடியாத இடத்தில் போய் நின்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று வரை அந்த இடத்தைத் தக்கவைத்து சுழன்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் தன் பலத்தைப் பதிவு செய்த அந்தப் புயல் இப்போது 169 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. அதன்படி ரஜினியின் 169வது படமாக தற்போது 'ஜெயிலர்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினி என்னும் அந்தப் புயல் தனது 72வது பிறந்தநாளை இன்று (12.12.2022) கொண்டாடி வருகிறது . அவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், "அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து, "பாசமுள்ள மனிதனப்பா - நீ மீசவச்ச குழந்தையப்பா... நன்றியுள்ள ஆளப்பா, நல்லதம்பி நீயப்பா... தாலாட்டி வளர்த்தது, தமிழ்நாட்டு மண்ணப்பா... தங்கமனம் வாழ்கவென்று, தமிழ்சொல்வேன் நானப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனுஷ், குஷ்பூ உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022