![Bussy anand admitted hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/WNMXJPUDAdgSXuQDDxITfFRdYl8DWSks9-BD64xY7EU/1698990767/sites/default/files/inline-images/Bussy%20anandh.jpg)
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் ரசிகர் மன்றமாக இருந்தபோதும், அதற்குப் பிறகு மக்கள் இயக்கமாக மாறிய போதும் தலைமை நிர்வாகியாகத் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வருபவர் புஸ்ஸி ஆனந்த். விஜய், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போதும், அரசியல் நுழைவு ஆகியவற்றிற்குத் திட்டமிடும் போது முன்னின்று எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பவராகத் திகழ்பவர் புஸ்ஸி ஆனந்த்.
லியோ திரைப்படம் வெளிவந்த போதும் அதற்குப் பிறகு வெற்றிவிழா நடந்த போதும் தொடர்ச்சியாகப் பணியாற்றியதால் சற்று சோர்வாகக் காணப்பட்டிருக்கிறார். தற்போது உடல்நலக்குறைவு சற்றே அதிகமானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவல் அறிந்து விஜய், மருத்துவமனை சென்று நலம் விசாரித்திருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் இன்னும் மக்கள் இயக்கம் சார்பாகவோ, மருத்துவமனை சார்பாகவோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.