விஜய்யின் மக்கள் இயக்கம், சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது.
இதையடுத்து இன்று மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் தலைமையில் நடைபெறுவதாக முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 2000 பெண்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் பொது பிரச்சனைகள் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் மகளிரை அணியில் சேர்ப்பதற்கான சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கல்லூரியில் முதல் நிலை படிக்கும் மாணவிகளை இணைத்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார். மேலும், "தளபதியின் குடும்பம் நாம் எல்லாருமே. உங்களுக்கு ஒண்ணுன்னா தளபதியும் அகில இந்திய தலைமையும் மாவட்டமும் உங்களுடன் இருக்கும்" என தெரிவித்தார்.
இந்நிலையில் அக்கூட்டத்தில் ஒரு நிர்வாகி, தளபதி எப்போது அரசியலுக்கு வராரு? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், "என்னை ஏன் வம்பில் மாட்டி விடுறீங்க. உங்க அண்ணன் வருவார். அவர்கிட்டையே இந்த கேள்வியை கேளுங்க. அவர் பதில் சொல்வார்" என்றார். இந்த கேள்விக்கு பல செய்தியாளர்களின் சந்திப்பில் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.