தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ தற்போது பிரிட்டன் நாட்டிற்கு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்துள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்பு அவரது உடல் நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நாட்கள் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ அவரது உடல் நலம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மருத்துவ சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளது. உடல்நலம் தற்போது நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. சிகிச்சைக்கு இந்திய அரசு பக்கபலமாக இருந்து உதவுகிறது. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ 120க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய 'வசீகரா...' (மின்னலே), 'மலர்களே மலர்களே...' (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்), 'ஒன்றா ரெண்டா...(காக்க காக்க), 'யாரோ மனதிலே...' (தாம் தூம்) உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.