நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பா.ரஞ்சித் மற்றும் பாலாஜி சக்திவேல் கலந்துகொண்டனர். அப்போது பாலாஜி சக்திவேல் திரைப்படவிழாவை தொடங்கி வைத்து பேசுகையில், “பா.ரஞ்சித் வருவதற்கு முன்னாடி இருந்த சினிமா வேறு. ஆனால் அவர் வருகைக்கு பிறகு மிகப்பெரிய அதிர்வை அவரது சினிமா ஏற்படுத்தியது. அத்தோடு மிகப்பெரிய தாக்கத்தோடு, கலாப்பூர்வமான பதிவுகளோடு, இந்திய சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர் இயக்குவதை தாண்டி தயாரிப்பாளராக மாறி அருமையான படங்களைக் கொடுத்து வருகிறார்.
அத்தோடு மட்டும் நிற்காமல் இதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என அவர் முன்னெடுத்தது அவருடைய நேர்மையை பரைசாற்றுகிறது. மேலும் ஒரு அரசியல் பதிவாக அவர் துவங்கிய நூலகம் மிக முக்கியமானது. எந்த இயக்குநருக்கும் தோன்றாத ஒரு விஷயம். எந்த பண நோக்கமும் இல்லாமல் சினிமாவில் சம்பாதிக்குற பணத்தை சினிமாவில் முதலீடு செய்கிறார். அதை எதிர்கால சந்ததியினருக்கு செய்கிறார். அவர் கோவக்காரர். ஆனால் அவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லவனுக்கு தான் கோவம் வரும். அந்தக் கோவத்துக்கு அர்த்தம் இருக்கு, மிகப்பெரிய வலி இருக்கு, அதை அவர் கதாபாத்திரம் மூலம் பேசுகிறார். மிகப்பெரிய ஆளுகளையும் கபாலி, காலா என சித்தரித்தது. இது எல்லாமே சாதரண விஷயமே கிடையாது” என்றார்.