Skip to main content

“என் ஆசையை நிறைவேற்றிய கதாபாத்திரம்” - பாலசரவணன்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
bala saravanan speech in pechi

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி மற்றும் மக்கள் குரல் ராம்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில், “வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் கோகுல் பினாய், விக்னேஷ், விஜய் கந்தசாமி இவர்கள் எல்லாம் என்னுடைய நண்பர்கள், இவங்க மூன்று பேருக்கும் நன்றி. வெரூஸ் நிருவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சங்கர், முஜீப் சார் ஆகியோருக்கும் நன்றி. இயக்குநர் ராமச்சந்திரன் சார் பைக் டிராவல் ஆர்வலர், அவரைப் போன்றவர்களால் தான் இதுபோன்ற இடங்களை கண்டுபிடிக்க முடியும். இந்த இடங்களுக்கு சாதாரண வாகனங்களில் பயணிக்க முடியாது. இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக எங்களுடன் வனத்துறை காவலர்கள் வருவார்கள், அவர்களுக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது, என்றார்கள். அப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எங்களை அங்கே அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்படி ஒரு கடினமான நிலப்பரப்பில் படப்பிடிப்பு நடத்தியதற்கு எங்கள் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படத்தை எடுப்பதற்கு இரண்டு படங்கள் எடுத்து விடலாம், அந்த அளவுக்கு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் நாம் இறங்கிவிட்டோம் என்றால், அது பிக் பாஸ் வீடு தான். எந்த ஒரு தொடர்பும் இருக்காது. அப்படி ஒரு இடத்திலும், எங்களுக்கு உணவு சரியான நேரத்தில் வந்துவிடும். வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் சில சமயங்களில் உணவு வருவதில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆனால், இப்படி ஒரு இடத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் எங்களுக்கு அனைத்தையும் சரியான நேரத்தில் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, நான்கு நண்பர்களில் ஒரு வேடமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம், படத்தில் இருந்த வேற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை அவரிடம் கேட்கலாமா என்று யோசித்த போது, அவரே நீங்க மாரி வேடத்தில் தான் நடிக்கிறீங்க, என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது. நான் காமெடி வேடம் மட்டும் இன்றி அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாரி கதாபாத்திரம் இருக்கும். மற்றவர்கள் சொன்னது போல், இந்த படம் இதுவரை பார்க்காத படம், என்று சொல்லவில்லை. இன்று ஆடியன்ஸ் ரொம்ப திறமையானவர்களாக இருக்கிறார்கள், உலகத்திரைப்படங்கள் பார்க்கிறார்கள், அதனால் அப்படி இப்படி என்று சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. ஆனால், ‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இது முழுக்க முழுக்க திகில் சஸ்பென்ஸ் படம். இப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று ஏங்கும், ரசிகர்களுக்கு இந்த படம் செம படமாக இருக்கும். இன்று டிரைலர் பார்த்து பலர் பாராட்டுகிறார்கள், நல்ல நல்ல கமெண்ட் வருகிறது. அதுபோல் படமும் நிச்சயம் ரசிகர்களிடம் பாராட்டு பெறும். இப்படி ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கே இருக்கும், அப்படி ஒரு படத்தில் நடித்தது மகிழ்ச்சி நன்றி.” என்றார்.

சார்ந்த செய்திகள்