தலைவி என்ற தலைப்பில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை படமாகிறது. ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கிரீடம், மதராசப்பட்டிணம், தலைவா ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்தான் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா படம் என்றால் அதில் கண்டிப்பாக எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் இல்லாமல் எடுக்க முடியாது, அப்படி இருக்கையில் யார் எம்.ஜி.ஆராக இப்படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மீசையில்லாமல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கான திரைக்கதையை, பாகுபலி, மெர்சல் ஆகிய படங்களின் திரைக்கதைகளை எழுதிய விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.