கலையரசன், வாணி போஜன் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செங்களம்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமீர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசுகையில், "இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தற்கு வாழ்த்துக்கள். அதில் அரசியல் இருக்கா, இல்லையா என ஆராய்வது நம்ம வேலை கிடையாது. கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்தது பெருமை. என்னை பொறுத்தவரை ஆஸ்கர் விருது பெரிய விருது கிடையாது. எல்லோராலும் பார்க்கப்படுவதனால் அதற்கு முக்கியத்துவம் இருந்ததே தவிர, அது அந்த நாட்டினுடைய தேசிய விருது என்று எடுத்துக்கொள்ளலாம்.
எல்லா விருதுகளிலும் அரசியல் இருக்கு. ஆஸ்கரில் மட்டும் கிடையாது. தேசிய விருது, மாநில அரசு விருது, தனியார் நடத்தும் விருது என அனைத்தும் இதில் அடங்கும். அது குறித்து விரிவாக நாம் பேச வேண்டியதில்லை. இந்தியாவில் சிறந்த நடிகன் சிவாஜி கணேசன் தான். அவர் வெளிநாட்டுக்கு சென்ற பொழுது ஹாலிவுட் நடிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காலம் உண்டு. அதற்கு காரணம் ஹாலிவுட் அளவு டெக்னாலஜி இல்லாமல் வெறும் மேக்கப்புடன் பல வேடங்களில் நடித்ததுதான். ஆனால், அவருக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் அவருக்கு கொடுக்கப்படவில்லை என ஆராய்ந்தால் சூழல் அப்படி தான் இருந்துள்ளது. அது போலத்தான் இன்றைக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த விருதுகள் முடிந்து போய்விட்டது. இப்போதெல்லாம் அதில் அரசியல் இருக்கிறது.
2007ஆம் ஆண்டு ரஜினி நடித்த சிவாஜி படம் வெளியானது. அந்தாண்டுக்கான மாநில அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றார் ரஜினிகாந்த். மனசாட்சி தொட்டு சொல்லுங்க, ரஜினி சிறந்த நடிகரா? இல்லை. அவர் சிறந்த என்டர்டெயினர். அந்த படத்தைப் பொறுத்தவரை நான் சொல்கிறேன். ரஜினியை ஏற்றுக்கொள்ளவில்லை என ஒருபோதும் நான் கூறியதில்லை. 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'முள்ளும் மலரும்' உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு ஏன் கொடுக்கப்படவில்லை" எனப் பேசினார்.