கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மாணவி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி அம்மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இதனால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என பலரும் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி கோவை பள்ளி மாணவி தற்கொலையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "கோவை பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் வேதனையளிக்கிறது. சிறுமிகளைக் காம எண்ணத்தில் பார்க்கும் அளவுக்கு நம்முடைய சமூகம் மாறியிருப்பது கவலையைத் தருகிறது. மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரையும், அதனைப் பொறுத்துக்கொள் என்று கூறிய தலைமை ஆசிரியரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். நான் பெரும்பாலும் பேருந்தில்தான் பயணித்திருக்கிறேன். அப்போது கூட்ட நெரிசலில் என்னையும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதை உடனே பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் இச்சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார்கள். இதேபோல பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு செய்யாததால்தான் கோவை மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என கூறினார்.