தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், முதன் முதலில் பாலிவுட்டில் நடித்த படம் ராஞ்சனா. பாலிவுட்டில் முதல் படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றார்.
ஆனந்த் எல் ராய் என்பவர் இப்படத்தை இயக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் சோனம் கபூர், அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை கடுமையாக சாடி ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார் இப்படத்தில் நடித்த அபய் தியோல்.
அதில், “ராஞ்சனா திரைப்படம் குறித்து தெளிவான, நியாயமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் பிற்போக்குத்தனமான கருத்தால், வரலாறு இதை கனிவாக பார்க்காது. பல தசாப்தங்களாக பாலிவுட்டின் கதைக்கரு இதுதான். ஒரு ஆண், ஒரு பெண் ஒப்புக்கொள்ளும் வரை கண்டிப்பாக துரத்தலாம், துரத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் சினிமாவில் மட்டுமே அந்த பெண் விரும்பி ஒப்புக்கொள்வாள். நிஜத்தில், பலமுறை இது போன்ற விஷயங்கள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு வித்திடுவதை பார்த்திருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களைத் திரையில் உயர்த்தி பேசுவது, பாதிக்கப்படும் பெண்ணின் மீதே குற்றம் சுமத்துவதற்கு வழிவகுக்கும். அதை இந்த விமர்சகர் அட்டகாசமாக விளக்கியுள்ளார். உங்கள் நேரத்தை செலவிட்டு அவரது கருத்தை படிக்கவும்" என்று பகிர்ந்துள்ளார்.