![Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video](http://image.nakkheeran.in/cdn/farfuture/2Xp9y33LZL8G3nmAuF8s_Bd7XjW5RxwQQtbx737DgCA/1686120745/sites/default/files/inline-images/th-1_4029.jpg)
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஐ.பி.எல். போட்டிகள் மூலம் அறிமுகமான கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், தனது சிறப்பான ஆட்டங்களால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். இந்திய அணியில் சில போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல்-லில் மொத்தம் 36 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 956 ரன்களை எடுத்துள்ளார். இந்த வருடம் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தமிழக வீரரான வெங்கடேஷ் ஐயர் பங்கேற்று விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏழாவது தரவரிசை பெற்று பிளேஆஃப்க்கு செல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
ஐ.பி.எல். போட்டி முடிந்துள்ள நிலையில், வெங்கடேஷ் ஐயர் தமிழகத்தின் கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களைச் சுற்றிப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். அந்தக் கோவிலில் வேத பாடசாலையும் இயங்கி வருகிறது.
![Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video](http://image.nakkheeran.in/cdn/farfuture/K6s_2obf1NbDfOSPZegdzbwaAszuSfmlLONktwjTtzQ/1686120781/sites/default/files/inline-images/th-2_1501.jpg)
அந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். மேலும், அந்த மாணவர்களுடன் வெங்கடேஷ் ஐயர் கோவில் வளாகத்திற்குள் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதை அங்கிருந்த மாணவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வெங்கடேஷ் ஐயர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது. அதே சமயம், கோவிலுக்குள் வெங்கடேஷ் ஐயர் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.