முருகப்பெருமான் சூரபத்மனை தனது ‘வேல்’ மூலம் வதம் செய்யும் நிகழ்வே சூரசம்ஹாரம் என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி மற்றும் தர்மத்தை மீட்டெடுப்பதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு மறுநாள் முருகனுக்கும் தேவசேனாவுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில். இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஓன்று.
அதேபோல், சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு வியர்க்கும் அபூர்வ நிகழ்ச்சியும் நடைபெற்றது. பலர் சங்கமித்திருக்கும் நாகை மாவட்ட கடவுள்களில் ஒன்றான சிங்காரவேலர் ஆலயம் சிக்கல் கிராமத்தில் உள்ளது. சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்படுகிறது. அதற்கேற்ப சிக்கல் ஆலயத்தின் சூரசம்ஹார விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (09.11.2021) திருத்தேர் விழா நடைபெற்றது.
தொடர்ந்து இரவு முருகப்பெருமான் தேரிலிருந்து ஆலயத்திற்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, சிங்காரவேலர் தனது தாயார் வேல்நெடுங்கன்னி அம்மனிடமிருந்து சூரசம்ஹாரத்திற்காக வேல் வாங்கினார். சக்திவேலை பெற்றுக்கொண்டபோது முருகனுக்கு ஆவேசத்தில் வியர்க்கும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா ஆகியோர் கலந்துகொண்டனர். முருகப்பெருமான் சிலையில் துளிர்த்த வியர்வைகளை அர்ச்சகர்கள் துணியை வைத்து துடைக்கத் துடைக்க மீண்டும் மீண்டும் வியர்வை துளிகள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த அபூர்வ காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக வேல் வாங்கும் நிகழ்ச்சிக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வியர்வை சிந்துவதைப் பார்க்க மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.