மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையே நடந்த புனல்வாதம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
இன்று விவாதங்கள் செய்வதற்கு நாடாளுமன்றம், சட்டமன்றம், வழக்காடு மன்றம் எனப் பல சபைகள் உள்ளன. ஜனநாயக நாட்டில் விவாதங்கள் மூலமும் கேள்விகள் மூலமும் பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்கிறோம். பௌத்தத்தின் கொடியும் சமணத்தின் கொடியும் தமிழகத்தில் பறந்துகொண்டிருந்த காலத்தில் சைவம் இந்த மண்ணில் காலூன்றப் போராடிக்கொண்டிருந்தது. சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையே மிகப்பெரிய சண்டை நடந்ததாகச் சரித்திரம் பதிவு செய்துள்ளது. எண்ணாயிரம் சமணர்களை மதுரையில் கழுவேற்றினார்கள் என்ற செய்தியைப் படிக்கிறபோது அதை உண்மை என்றுதான் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.
சண்டைக்குச் செல்லாமல், சச்சரவில் ஈடுபடாமல் இன்று விவாதம் செய்வதுபோல அன்றும் விவாதம் செய்தார்கள். அனல்வாதம், புனல்வாதம் என்ற இரண்டு முறை அன்றைக்கு வழக்கத்தில் இருந்தன. அனல்வாதம் என்றால் தன்னுடைய படைப்புகளை, தன்னுடைய எழுத்துகளை தீயில் போடுவது. தீயில் போட்டதற்கு பிறகு அது எரியாமல் இருந்தால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். புனல்வாதம் என்றால் தீயிற்குப் பதிலாக தண்ணீரில் போடுவது. தண்ணீரில் போட்ட அந்த ஏடு நீருக்கு எதிர்நீச்சல் போட்டால் அதை எழுதியவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையேயான மோதலில் மதுரைக்கு பக்கத்தில் புனல்வாதம் நடைபெற்றது. புனல்வாதத்திற்கு தயாரானார் ஞானசம்பந்தர். அவர் எழுதிய ஏடு தண்ணீரில் போடுவதற்குத் தயாராக இருந்தது. அது தண்ணீரில் இழுத்துக்கொண்டு சென்றால் அந்தப் பாட்டிற்கு உயிரும் உணர்ச்சியும் இல்லை என்று அர்த்தம். அந்தப் பாடலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போது சமணர்கள் எழுதிய ஏடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட, ஞானசம்பந்தர் எழுதிய ஏடு மட்டும் எதிர்நீச்சல் போட்டது. அந்த ஏட்டில், 'வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்' என்று ஞானசம்பந்தர் எழுதியிருந்தார். ஒருவன் வாழவேண்டும் என்று வாழ்த்தினால் நடக்காத அதிசயங்கள் எல்லாம் நடக்கும். தேர் ஓடவில்லை எனும்போது சேந்தனார் பாடியதும் தேர் நகர்ந்தது என்று படிக்கிறோம். அதேபோல 'வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்' என்று ஞானசம்பந்தர் எழுதிய அந்த ஏடு எதிர்நீச்சல் போட்டது.
ஆணினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். இன்றைக்கு பசு சர்ச்சைக்குரிய அரசியலாகிவிட்டது. அன்றைக்கு பசுக்களைப் பாதுகாப்பது, மேய்ப்பது, பணிவிடை செய்வது என்பது அறமாகக் கருதப்பட்டது. ஆகவே அந்தணர் என்போர் அறம் பேசக்கூடிய அறவோர். அந்தணர்கள் என்றால் சமுதாயத்தை ஆற்றுப்படுத்துபவர்கள். அந்தணர்கள் என்பவர்கள் ஆட்காட்டி விரல்நீட்டி குற்றம் சாட்ட முடியாத அப்பழுக்கற்றவர்கள். அவர்கள் ஆகாயத்தைப்போல சுத்தமானவர்கள். அந்த அந்தணர்கள் வாழட்டும் என்று அந்த ஏட்டில் வாழ்த்து எழுதியிருந்தார். அதற்கு அடுத்தடுத்த வரிகளில் மழை பொழியட்டும்; குடி செய்து மக்களை பாதுகாக்கும் மன்னனின் புகழ் ஓங்கட்டும்; எல்லாவித தீமைகளும் ஆழ்ந்து போகட்டும்; இறைவனின் திருநாமம் எல்லா இடங்களிலும் சூழட்டும்; இந்த உலகத்தின் எல்லா துயரங்களும் நீங்கட்டும் என எழுதியிருப்பார்.
வாழ்த்து என்பது ஒருவனை வாழவைக்கும் என்பதைவிட, ஒருவனுடைய வாழ்த்து ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்பதைவிட ஒரு வாழ்த்தை தண்ணீர்கூட அடித்துச் செல்லாது, ஒரு வாழ்த்தை நெருப்புகூட தின்று தீர்க்காது. காரணம் அந்த வாழ்த்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை தமிழ்ப்பாட்டில் பதிவுசெய்துள்ளார் திருஞானசம்பந்தர். அதை மதுரையில் அவர் நிரூபிக்கவும் செய்தார். இதை 'வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு' என்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைப் பாட்டிலும் பதிவு செய்துள்ளார்கள்.ஒரு வாழ்த்திற்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதை மேற்கண்ட விஷயத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.