ஒரு பெண் சமூகத்தில் புகழ்பெற்று விளங்கினால், அவளது பெற்றோரும் உற்றாரும் மிகவும் பெருமிதம் கொள்வார்கள். ஆனால் பல பெண்கள் சாதனை படைக்க ஆர்வமிருந்தாலும் நடைமுறையில் செய்யமாட்டார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று முயற்சி செய்யாமல் விட்டுவிடுவார்கள். அதன்காரணமாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை நழுவவிட்டுவிடுவார்கள்; தங்களின் திறமைகளை வீணாக்கிவிடுவார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையுடன் சுயவீட்டிலோ, மூலத்திரிகோணத்திலோ, உச்சமாகவோ இருந்தால், அந்த பெண்ணுக்கு சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் நிறைய இருக்கும். தன் வேலைகளை தைரியமாகச் செய்வாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-க்கு அதிபதி நல்ல இடத்தில் வலுவாக இருக்கவேண்டும். சுயவீட்டில் இருக்கவேண்டும் அல்லது சுபகிரகத்தால் பார்க்கப்படவேண்டும். அப்படிப்பட்ட நிலையிலுள்ள பெண்ணுக்கு நல்ல குடும்பவாழ்க்கை அமையும்.அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அவளைப் பாராட்டுவார்கள். பணவசதி இருக்கும். சந்தோஷமாக வாழ்வார்கள். 3-க்கு அதிபதி ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் நல்ல சகோதரர்கள் இருப்பார்கள். அதனால் அவளுக்கு மன தைரியம் இருக்கும். 3-ல் பாவ கிரகம் இருந்தால் தைரியமான பெண்ணாக இருப்பாள்.4-க்கு அதிபதி கெட்டுப்போனால் அல்லது 4-ஆம் வீட்டை பாவ கிரகம் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு அவளுடைய வீட்டில் பிரச்சினைகள் உண்டாகும். 4-க்கு அதிபதி நல்ல நிலையில் இருந்தால் வாகன வசதி இருக்கும். வீட்டில் சந்தோஷச் சூழல் நிலவும். தைரியமாக வேலையைச் செய்வார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-க்கு அதிபதி நல்ல நிலையில் இருந்தால், அந்தப் பெண் புகழுடன் வாழ்வாள். 5-ஆம் அதிபதி உச்சமாக இருந்தால் அரசியல், கலைத்துறை ஆகியவற்றில் புகழுடன் விளங்குவாள்.
6-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால் நோய்த் தாக்கம் அவ்வளவாக இராது. பாவ கிரகம் இருந்தால் அவள் தைரியத்துடன் இருப்பாள். பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-க்கு அதிபதி 2, 5, 9, 11 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் நல்ல கணவர் அமைவார். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். ஏதாவது தொழில் செய்தால், அதில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.8-ல் பாவ கிரகம் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். செவ்வாய், ராகு, சனி அல்லது சூரியன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 8-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு இருமுறை திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது.9-க்கு அதிபதி சுபகிரகமாக இருந்து அது உச்சமாகவோ அல்லது 5, 9, 11-ல் இருந்தாலோ அவள் செய்யும் தொழிலில் அவளுக்கு வெற்றி, புகழ் கிடைக்கும்.
10-க்கு அதிபதி சுயவீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அவள் சுயமுயற்சியால் புகழ் பெறுவாள். யாருடைய உதவியுமில்லாமல், தன் சொந்த முயற்சியால் 31 வயதிற்குப்பிறகு புகழைப் பெறுவார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 11-க்கு அதிபதி 11-ல் அல்லது உச்சமாக இருந்தாலும், 11-ல் சூரியன் அல்லது சனி இருந்தாலும் அந்தப் பெண் நல்ல பணவசதியுடன் இருப்பாள்.12-க்கு அதிபதி பாவ கிரகமாக இருந்தால், அவளுக்கு பயணத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தூக்கம் நன்றாக வராது. இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். 12-ல் சூரியன், சனி அல்லது செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி இருந்தால் இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.லக்னத்தில் கேது, 7-ல் ராகு, 10-ல் சனி, 12-ல் செவ்வாய் இருந்தால், 30 வயதிற்குப்பிறகு அவள் கடுமையான வாழ்க்கையை வாழவேண்டியதிருக்கும். அவளுடைய கணவருக்கு விபத்து ஏற்படலாம். சிலருக்கு இரண்டாவதாகத் திருமணம் நடைபெறும்.
பரிகாரங்கள்
ஒரு பெண் மகிழ்வுடன் இருப்பதற்கு, தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் சூரியனை வழிபடவேண்டும்.
சமையலறையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆடைகளை நினைத்த இடத்தில் போடக்கூடாது. அவற்றை மடித்து உரிய இடத்தில் வைக்கவேண்டும். வீட்டைச் சுத்தமாக வைக்கவேண்டும். கருப்புநிற ஆடையைத் தவிர்ப்பது நல்லது.
திங்கட்கிழமைதோறும் சிவனை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து துர்க்கை ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். 5, 9-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.
ஞாயிற்றுக்கிழமை தலைக்குக் குளிக்கக்கூடாது. குளித்தால் எண்ணெய் தேய்க்கக்கூடாது.
குலதெய்வத்தை வணங்குவது அவசியம்.
குரு பகவானின் அருளைப் பெறுவதற்கும், பணவசதி நிலைப்பதற்கும் வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெறவேண்டும்.
வியாழக்கிழமை பசுவுக்கு வெல்லம், மஞ்சள் வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்துவந்தால் இன்னல்கள் விடைகொடுக்கும். நிம்மதியான வாழ்வைக் காணலாம்