
விருத்தாசலம் மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் தியாக இரமேஷ். இவர், தற்போது சிங்கப்பூரில் பணியாற்றிவருகிறார். மேலும், இவர் இலக்கியவாதியும்கூட. இவரது கவிதையானது சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி உயர்தமிழ் வகுப்பு 2A (நம்மூர் படிப்புக்கு எட்டாம் வகுப்பு) தமிழ் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. இது விருத்தாசலம் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டு பெற்றுவருகிறது.
தியாக இரமேஷ், விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986இல் பிளஸ் 2 படிப்பை முடித்தபின், 1990இல் சேலத்தில் உள்ள ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தற்போது பத்து ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று பணியாற்றிவருகிறார். வேலை நேரம் தவிர்த்து தொடர்ந்து கவிதை, இலக்கியம் என்று சிங்கை இலக்கிய வெளியில் பயணித்துவருகிறார் இரமேஷ்.

சிங்கப்பூரில் கவிதைக்கென்றே இயங்கும் கவிமாலை அமைப்பில் துணைச் செயலாளராகவும், தற்போது செயலவை உறுப்பினராகவும் செயலாற்றிவருவதோடு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் போன்ற பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றியும்வருகிறார்.
இதுவரை நான்கு கவிதைத் தொகுப்பும், ஒரு பொன்விழா மலரையும் வெளியிட்டுள்ள தியாக இரமேஷ், பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடைய முதல் தொகுப்பான ‘அப்படியே இருந்திருக்கலாம்’ தொகுப்பினை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் MPhil ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.