Published on 11/09/2021 | Edited on 11/09/2021
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சூடான் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுதலை செய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி கடந்த 11ஆம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று (10.09.2021) 30வது நாளாகப் போராட்டம் வெடித்தது. அப்போது இரவில் மெழுகுவர்த்தியைக் கையில் ஏந்தியபடி அமர்ந்து, இருள் சூழ்ந்த தங்கள் வாழ்வில் முதலமைச்சர் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் முகாமிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.